வலங்கைமான் அருகே, வக்கீல் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை

வலங்கைமான் அருகே வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-10-14 11:00 GMT
வலங்கைமான், 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே முனியூர் கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ராஜ்குமார்(வயது 36). இவர், நீடாமங்கலம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சந்தியா(28). இவரும் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு 10 மணிக்கு ராஜ்குமார், சடையன்கால் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு 12 மணி ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதையடுத்து ராஜ்குமார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி சடையன்கால் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்கு சென்ற அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ராஜ்குமார் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த வெட்டு காயத்துடன் வயல் பகுதியில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து சந்தியா மற்றும் குடும்பத்தினர் அரித்துவாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மற்றும் போலீஸ் மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலைக்கான காரணம் என்ன? முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வக்கீல் ராஜ்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி நீடாமங்கலத்தில் கோர்ட்டு முன்பு நேற்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் சந்தோஷ், மருதுபாண்டியன், அருண்குமார், ஸ்டாலின்பாரதி, மணிவேல், அனுஷா உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து வக்கீல்கள் தங்களது கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.

மேலும் செய்திகள்