மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் - 16 பேர் கைது

நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-13 16:30 GMT
நாகர்கோவில்,

வேளாண் மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது. இதேபோல் குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் நேற்று காலை கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, நிர்வாகிகள் அண்ணாத்துரை, அனில்குமார், நாகராஜன், ஆர்.இசக்கிமுத்து, வேலம்மாள் உள்பட 16 பேரை கைது செய்தனர்.

பின்னர் அனைவரையும் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். மதியம் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தக்கலையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ தலைமையிலும், நித்திரவிளையில் மாவட்ட துணைச் செயலாளர் துரைராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்