ஜோலார்பேட்டை அருகே, டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை - 3 கிலோ வெள்ளி, பணத்தையும் அள்ளிச்சென்றனர்

ஜோலார்பேட்டை அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

Update: 2020-10-13 14:00 GMT
ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை அருகே உள்ள எம்.எம்.எம். ரெட்டி தெருவில் வசிப்பவர் பாலசுப்ரமணியம் (வயது 42). வாட்டர் சர்வீஸ் மற்றும் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டை பூட்டி விட்டு ஓசூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது குறித்து அருகே உள்ள தண்டபாணி என்பவர் பாலசுப்பிரமணியத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். உடனடியாக அவர் விரைந்து வந்து பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 30 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து பாலசுப்பிரமணி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் சம்பவ இடத்திற்கு வேலூரில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். அத்துடன் வேலூரில் இருந்து சன்னி என்ற துப்பறியும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து அருகில் உள்ள ரேஷன்கடை எதிரே மைதானம் வரை ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்