கோவில் திருவிழாக்களில் நிகழ்ச்சி நடத்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் மனு

கோவில் திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மனு கொடுத்தனர்.

Update: 2020-10-13 03:06 GMT
திருப்பூர்,

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் பகுதியை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், கலை கலாசார பிரிவு மாவட்ட தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் வந்திருந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் வசித்து வருகிறோம். கடந்த 6 மாதமாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து கலைஞர்களின் தொழிலையும் முடங்கி விட்டது. நையாண்டி மேளம், கரகாட்டம், பெண்கள் கும்மி ஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், உடுக்கை பாட்டு கொண்ட குழுக்களை சேர்ந்த கலைஞர்கள், பொதுமக்கள் நடத்தும் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும், கோவில் திருவிழாக்களிலும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி நாட்டுப்புறகலைகளையும், கலைஞர்களின் குடும்பங்களையும் வாழ வைக்க வேண்டும்.

தமிழக அரசு வழங்கி வரும் மாவட்ட விருதுகளை ஒரு மாவட்டத்திற்கு 100 கலைஞர்களுக்கு வழங்க வேண்டும். மூத்த கலைஞர்களுக்கு உதவித்தொகை பெற உதவி செய்ய வேண்டும். கலைமாமணி விருதை நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு வழங்கி வரும் விலையில்லா இசைக்கருவிகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 100 கலைஞர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் நாதஸ்வரம், தவில் இசை பயிற்சி பள்ளிகளை தொடங்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு வெளியே வந்த நாட்டுப்புற கலைஞர்கள், கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் முன்பு வரிசையாக நின்று நாதஸ்வரம், தவில் இசைத்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.

மேலும் செய்திகள்