கூடலூரில் பழுதாகி கிடக்கும் எரிவாயு தகன மேடை: சீரமைக்க நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை

கூடலூரில் எரிவாயு தகன மேடை பழுதாகி கிடக்கிறது. அதனை சீரமைக்க நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Update: 2020-10-12 22:36 GMT
கூடலூர்,

கூடலூரில் உள்ள காளம்புழா பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடை இருக்கிறது. இங்கு கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையில் வெள்ளம் புகுந்தது. தொடர்ந்து மழை பெய்ததால், வெள்ளம் வடியாமல் இருந்தது.

மேலும் தகன மேடையில் உள்ள புகைப்போக்கி குழாய்கள் பழுதடைந்தது. இதனால் அங்கு இறந்தவர்களின் உடல்களை எரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு மாறாக அருகில் உள்ள நிலத்தில் விறகுகள் வைத்து, திறந்தவெளியில் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே பழுதடைந்து கிடக்கும் எரிவாயு தகன மேடையை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் சென்னையில் இருந்து வந்த சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்த எரிவாயு தகன மேடையை ஆய்வு செய்தனர். பின்னர் அடுத்த சில நாட்களில் எரிவாயு தகன மேடையை சீரமைக்கும் பணி நடைபெறும் என உறுதி அளித்தனர். ஆனால் இன்னும் பணி தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் கூறியதாவது:-

எரிவாயு தகன மேடைக்குள் வெள்ளம் புகுந்ததால், பழுது ஏற்பட்டு உள்ளது. அங்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் சீரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மழைக்காலத்தில் இதுபோன்று பழுது ஏற்பட்டு இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட முடியாத நிலை உருவாவதை தவிர்க்கும் வகையில் எரிவாயு தகன மேடை வளாகத்தில் நிரந்தர கூடாரம் அமைக்கப்படும். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்