சோமரசம்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ.2½ லட்சம் திருட்டு
சோமரசம்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.2½ லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜீயபுரம்,
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் சக்தி நகரில் வசிப்பவர் தண்டபாணி (வயது 70). இவர் தனது குடும்பத்துடன் பழனிமலை முருகன் கோவிலுக்கு கடந்த 10-ந் தேதி சென்றார். மறுநாள் காலை அந்த வழியாக சென்றவர்கள் தண்டபாணி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தண்டபாணியிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அவர் வீட்டுக்கு விரைந்து வந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகைகள், ரூ.2½ லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசில் தண்டபாணி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.