சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு: ஓட்டப்பந்தயத்திற்கு வந்த 18 கர்ப்பிணி பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வில், ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வந்த கர்ப்பிணி பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Update: 2020-10-12 22:15 GMT
சென்னை, 

சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வில், ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள வந்த கர்ப்பிணி பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 ஆண்-பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு கடந்த ஜனவரி மாதம் எழுத்து தேர்வு நடந்தது. இதில் சுமார் 5,500 பேர் தேர்வானார்கள். இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கடந்த மாதம் 30-ந் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தொடங்கியது.

கொரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தவர்கள் மட்டும் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு உயரம் மற்றும் மார்பளவு சரிபார்க்கப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாதவர்களுக்கு, உரிய சான்றிதழுடன் வந்தால் இன்னொரு நாளில் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

பெண்களுக்கான உடல் தகுதி தேர்வும் தனியாக நடத்தப்பட்டது. அதில் 1,500 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த 18 கர்ப்பிணி பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் குழந்தை பெற்று, உடல் தகுதியான பிறகு 2 வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும், அப்போது அவர்கள் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுடன் முதல் கட்ட உடல் தகுதி தேர்வு முடிவுற்றது.

இன்று (செவ்வாய்) முதல் வரும் 30-ந் தேதி முடிய 2-வது கட்ட உடல் தகுதி தேர்வு நடக்கும் என்று தெரிய வந்துள்ளது. 2-வது கட்ட உடல் தகுதி தேர்வில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறும் போட்டிகள் நடத்தப்படும். பெண்களுக்கு கயிறு ஏறும் போட்டிக்கு பதிலாக கிரிக்கெட் பந்து எறியும் போட்டி, குண்டு வீசும் போட்டி நடைபெறும். சென்னை போக்குவரத்து போலீஸ் (வடக்கு) இணை கமிஷனர் பாண்டியன் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு சியாமளா உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வில் போலீஸ்காரர் காயம்: ஓட்டப்பந்தயத்தில் கீழே விழுந்து கால் முறிந்தது

சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு ஓடிய ராஜ்குமார் என்ற ஆயுதப்படை போலீஸ்காரர் கீழே விழுந்து விட்டார். இதில் அவரது கால் முறிந்துவிட்டது. அவர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

மேலும் செய்திகள்