ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.33 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.33 லட்சம் மதிப்பில் திண்டுக்கல்லை சேர்ந்த 50 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

Update: 2020-10-12 01:43 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்த 50 பேருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாநகராட்சியில் பல பகுதிகள் நெருக்கடி மிகுந்த பகுதிகளாக உள்ளன. இந்த பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் சிறப்பாக மேற்கொண்டு உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நிலவிய குடிநீர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டு வருகிறது.

தற்போது திண்டுக்கல் நெட்டுத்தெருவில் வசிக்கும் 50 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சம் மதிப்பிலான வீட்டுமனை பட்டாக்களை இலவசமாக வழங்க உள்ளேன். மேலும் 100 பேர் வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களுக்கும் விரைவில் பட்டா வழங்கப்படும். வீட்டுமனை பட்டா பெற்றவர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை மூலம் பசுமை வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் வழங்கினார். பின்னர் சிதம்பரனார் தெருவில் கழிவுநீர் வாய்க்கால், சிறுபாலம் அமைப்பதற்கான பூமிபூஜையில் அமைச்சர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, ஆர்.டி.ஓ. உஷா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், தாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) கண்ணன், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.டி.ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்