தஞ்சை அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்களின் கதி என்ன? தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டை

தஞ்சை அருகே ஆற்றில் குளித்த 2 மாணவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்கள் கதி என்ன? என்று தீயணைப்பு படையினர் தேடி வருகிறார்கள்.

Update: 2020-10-12 00:33 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த மானோஜிப்பட்டி தெற்கு பூக்கொல்லை ராஜகுரு நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நித்தீஷ்(வயது 19), ராஜராஜன் நகரை சேர்ந்த செல்லத்துரை மகன் ஹரிகரன்(17). இவர்கள் இருவரும் தஞ்சையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்(ஐ.டி.ஐ.) படித்து வருகிறார்கள். நேற்று மாலை இவர்கள் இருவரும் தனது நண்பர்களுடன் மானோஜிப்பட்டியில் உள்ள கல்லணைக்கால்வாயில் குளிக்க சென்றனர். மொத்தம் 7 பேர் குளித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது மற்றவர்கள் அனைவரும் கரைக்கு வந்தபோது ரித்தீஷ், ஹரிகரன் ஆகிய இருவர் மட்டும் கரைக்கு திரும்பி வரவில்லை. இருவரும் தண்ணீரில் மூழ்கினர். ஆற்றில் தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டதால் அவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இதைப்பார்த்த அவருடைய நண்பர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டனர்.

கதி என்ன? தேடுதல் வேட்டை

இதுகுறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா உத்தரவின் பேரில் உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன் மேற்பார்வையில் நிலைய அலுவலர் திலகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் இரவுநேரம் ஆகி விட்டதால் தொடர்ந்து தீயணைப்பு வீரர்களால் தேட முடியவில்லை. இருப்பினும் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மாணவர்கள் கதி என்ன ஆனது? என தெரியவில்லை. இன்று(திங்கட்கிழமை) 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர். இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்