தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை தினமும் 2,500-ஐ தாண்டியது இதுவரை 2.16 லட்சம் பேருக்கு பரிசோதனை

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை தற்போது தினமும் 2 ஆயிரத்து 500 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 2.16 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-10-12 00:17 GMT
தஞ்சாவூர்,

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களுள் தஞ்சையும் ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்று 200-க்கும் அதிகமாக காணப்பட்டது.

நேற்று முன்தினம் தான் 200-க்கும் குறைவாக காணப்பட்டது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பரிசோதனை

இதில் அறிகுறி காணப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, கல்லுக்குளம், கரந்தை, மானம்புச்சாவடி, சீனிவாசபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர மாநகராட்சி சார்பில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனமும் செயல்பட்டு வருகின்றன.

இதே போல் கும்பகோணம் அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. தற்போது தஞ்சை மாவட்டத்தில் தினமும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2.16 லட்சம் பேர்

அதன்படி கடந்த 3-ந்தேதி தஞ்சை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 4-ந்தேதி இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 3 ஆயிரத்து 93 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 5-ந்தேதி 2,698 பேருக்கும், 6-ந்தேதி 2,506 பேருக்கும், 7-ந்தேதி 2,809 பேருக்கும், 8-ந்தேதி 2,596 பேருக்கும், 9-ந்தேதி 2,743 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 210 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 13 ஆயிரத்து 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 12 ஆயிரத்து 209 பேர் தொற்று குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 1,057 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டத்தில் 199 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்