டிராக்டர் புகுந்து டீக்கடை சுவர் இடிந்ததில் விவசாயி பலி: 2 பேர் படுகாயம்
விக்கிரமங்கலத்தில் டிராக்டர் புகுந்து டீக்கடை சுவர் இடிந்ததில் விவசாயி பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
விக்கிரமங்கலம்,
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருபவர் வீரமணி(வயது 36). இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது கடையில் டீ தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து கொண்டிருந்தார். அப்போது டீக்கடையின் உள்ளே அமர்ந்து ஆலவாய் கிராமத்தை சேர்ந்த விவசாயியான சீமான்(58), இவரது உறவினர் விக்கிரமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த பாஸ்கர்(46) ஆகியோர் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக உடையவர் தீயனூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம்(46), அம்பாப்பூர் பகுதியில் இருந்து தனது டிராக்டரை ஓட்டி வந்தார். அவர் டிராக்டரை டீக்கடைக்கு அருகே உள்ள வளைவு பகுதியில் திருப்பியபோது எதிர்பாராதவிதமாக அவருடைய கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் வீரமணியின் டீக்கடையின் உள்ளே புகுந்து சுவற்றில் மோதியது. அப்போது சுவர் இடிந்து, டீ குடித்துக்கொண்டிருந்த சீமான், பாஸ்கர், டீக்கடை உரிமையாளர் வீரமணி ஆகியோர் மீது விழுந்தது.
இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதைக்கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கி கிடந்த 3 பேரையும் மீட்டு உடனடியாக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சீமான் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். படுகாயமடைந்த பாஸ்கர், வீரமணி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.