சங்கரன்கோவில் அருகே பயங்கரம் திருமணம் செய்து வைக்காததால் விவசாயி அடித்துக் கொலை மகன் கைது

சங்கரன்கோவில் அருகே திருமணம் செய்து வைக்காததால் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-11 23:28 GMT
சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஊத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாடப்பன் (வயது 70). விவசாயியான இவர் மாடுகளை வளர்த்து வந்தார். இவருடைய மனைவி கோமதி (68). இவர்களுக்கு அன்னலட்சுமி, மாரியம்மாள் ஆகிய 2 மகள்களும், செல்வராஜ் (35) என்ற மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.

கூலி தொழிலாளியான செல்வராஜ் சரியாக வேலைக்கு செல்லவில்லை. மேலும் அவர் அடிக்கடி தன்னுடைய தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி வந்தார். அத்துடன் தனது செலவுக்கு பணம் தருமாறு கேட்டும் தந்தையிடம் தொந்தரவு செய்து வந்தார்.

அடித்துக் கொலை

இதனால் மாடப்பனுக்கும், மகன் செல்வராஜிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவில் மாடப்பன் மாட்டு தொழுவத்தில் மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றார். அப்போது அங்கு வந்த செல்வராஜ் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த செல்வராஜ், அங்கு கிடந்த கம்பால் தந்தை மாடப்பனின் தலையில் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மகன் கைது

இதுகுறித்து அப்பகுதியினர் சின்ன கோவிலாங்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாடப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். திருமணம் செய்து வைக்காததால், தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்