ஊசிமலை காட்சி முனைக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஊசிமலை காட்சி முனைக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா? என கூடலூர் பகுதி பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கூடலூர்,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் இ-பாஸ் பெற்றால் மட்டுமே நீலகிரிக்குள் வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடலூர் பகுதியில் முதுமலை புலிகள் காப்பகம், ஊசிமலை காட்சி முனை, நடுவட்டம் ஆங்கிலேயர் கால சிறைச்சாலை, பைக்காரா படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இ-பாஸ் முறையில் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேபோல் சுற்றுலா தொழிலை சார்ந்து வாழும் தொழிலாளர்கள் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்த நிலையில் இ-பாஸ் முறையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்குவதால் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வந்து செல்கின்றனர். இதேபோல் உள்ளூர் மக்களும் பொழுதைக் கழிக்கும் வகையில் நெருக்கடி அதிகம் இல்லாத சுற்றுலா தலங்களை பார்வையிட அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கூடலூர் பகுதியில் உள்ள பைக்காரா படகு குழாம், நடுவட்டம் ஆங்கிலேயர் கால சிறைச்சாலை, ஊசிமலை காட்சி முனை, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களை கண்டு களிக்கும் வகையில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:-
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் இ-பாஸ் பற்று சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் உள்ளூர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊசிமலை காட்சி முனை உள்ளிட்ட இடங்களை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மனஅழுத்தத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.