35 அடி உயர நடைமேம்பாலத்தில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை
ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே 35 அடி உயர நடைமேம்பாலத்தில் இருந்து குதித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆலந்தூர் ஆசர்கானா பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான அரசு மற்றும் ஆம்னி பஸ்களில் மக்கள் வருகின்றனர். ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் வரும் பயணிகள், நகரின் பல பகுதிகளுக்கு சிரமம் இன்றி செல்ல ஜி.எஸ்.டி சாலையின் நடுவே மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் சார்பில் லிப்ட், எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது.
ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி. சாலையை பொதுமக்கள் கடக்க சுமார் 35 அடி உயரத்தில் இந்த நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமேம்பாலத்தில் இருந்து ஆசர்கானாவில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் பாதையில் சுமார் 37 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரென கீழே குதித்தார்.
சுமார் 35 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்ததால் அவரது கால் உடைந்ததுடன், தலையில் பலமாக அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பரங்கிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்தவர், ஆற்காடு அருகே உள்ள கலவை கிராமம் சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 37) என்பது தெரிந்தது. கூலி தொழிலாளியான இவர், கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
ஊரில் வேலை எதுவும் இல்லாமல் இருந்ததால் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்தார். ஆனால் இங்கு பல இடங்களில் தேடியும் வேலை கிடைக்கவில்லை என தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த பெருமாள், நடைமேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.