அணைக்கட்டு அருகே பரபரப்பு: விசாரணைக்காக வந்த வருவாய் கோட்டாட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

அணைக்கட்டு அருகே விசாரணைக்காக வந்த வருவாய் கோட்டாட்சியரை கிராம மக்கள் சூழ்ந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-11 06:30 GMT
அணைக்கட்டு,

அணைக்கட்டை அடுத்த வரதலம்பட்டு ஊராட்சியில் புளியமரம் ஒன்று உள்ளது. அதன் அருகில் அப்பகுதியைச் சேர்ந்த விநாயகத்துக்கு சொந்தமான 3 ஏக்கர் விளைநிலம் உள்ளது. அவர், அந்த நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். நிலத்தின் ஓரம் உள்ள புளியமரத்தை அவர் அகற்ற முயற்சி செய்து வருகிறார். இதையறிந்த கிராம மக்கள் புளியமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து கலெக்டர், தாசில்தாரிடம் 2017-ம் ஆண்டு கிராம மக்கள் மனு கொடுத்தனர். விநாயகம் இறந்து விட்டதால், அவரின் மகன்கள் வெங்கடேசன், சண்முகம் ஆகியோர் 20 நாட்களுக்கு முன்பு மீண்டும் புளிய மரத்தை வேருடன் அகற்ற தொழிலாளர்களுடன் அங்கு சென்றார்.

இதையறிந்த வரதலம்பட்டு கிராம மக்கள் புளியமரத்தை அகற்றக் கூடாது எனக்கூறி அவர் களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் தாசில்தார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து வருவாய் கோட் டாட்சியர் விசாரணைக்கு வருவதாக கூறிவிட்டு சென்றார்.

அதன்படி நேற்று மாலை வருவாய் கோட்டாட்சியர் கணேஷ், தாசில்தார் சரவணமுத்து, வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள், புளியமரம் எங்களுக்கு பஸ் நிறுத்தமாக, நிழல் தரும் மரமாக உள்ளது. விநாயகத்தின் மகன்கள் புளிய மரத்தை வேருடன் அகற்ற முயன்று வருகிறார்கள். அங்குள்ள பகுதியை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து வருகிறார்கள், எனத் தெரிவித்தனர்.

அதற்கு வருவாய் கோட்டாட்சியர், விநாயகம் 1994-ம் ஆண்டு புளிய மரத்துக்கும், புளிய மரம் இருக்கும் இடத்துக்கும் சேர்த்து பட்டா வாங்கி உள்ளதாக, கூறினார். உடனே ஆவேசம் அடைந்த வரதலம்பட்டு கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியரை சூழ்ந்து முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள், பட்டாவை நீக்கி பஸ் நிறுத்தத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் எனக் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகை போராட்டத்தைக் கைவிட செய்தனர்.

வருவாய் கோட்டாட்சியர், இரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துமாறு, கூறினார். அதன்பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்