இன்று திருமண நிச்சயதார்த்தம்: லாரி மீது மொபட் மோதி இளம்பெண் பலி - தாய் கண் முன்னே பரிதாபம்

இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் ஓசூர் அருகே லாரி மீது மொபட் மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். தாய் கண் முன்னே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-10-10 22:30 GMT
ஓசூர்,

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன். இவருடைய மனைவி வனிதா(45). இவர்களது மகள் ஜமுனா (வயது 24). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு மாதேவபுரா பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் ஜமுனாவும், அவரது தாயார் வனிதாவும் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் ஜமுனாவுக்கும், திருப்பத்தூர் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து மொபட்டில் ஜமுனாவும், அவரது தாயார் வனிதாவும் திருப்பத்தூருக்கு நேற்று புறப்பட்டு சென்றனர்.

ஓசூர் அருகே குமுதேப்பள்ளி என்ற இடத்தில் அவர்கள் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது மொபட் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து ஜமுனா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாயார் வனிதாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில், தாய் கண் முன்னே இளம்பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்