காமக்யா-யஷ்வந்தபுரம் இடையே வாராந்திர ஏ.சி. சிறப்பு ரெயில் 14-ந்தேதி முதல் இயக்கம்: தென்மேற்கு ரெயில்வே தகவல்
காமக்யா-யஷ்வந்தபுரம் இடையே வாராந்திர ஏ.சி. சிறப்பு ரெயில் 14-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.
பெங்களூரு,
தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் இருந்து அசாம் மாநிலம் காமக்யாவுக்கு இருமார்க்கமாக வாராந்திர ஏ.சி.சிறப்பு ரெயில் இயங்க உள்ளது. அதன்படி பெங்களூருவில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் காமக்யாவுக்கும், காமக்யாவில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ரெயில்கள் இயங்குகிறது.
பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில்(வண்டி எண்:-02551) வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணிக்கு காமக்யாவை சென்றடைகிறது. அதுபோல காமக்யா ரெயில் நிலையத்தில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு புறப்படும் ரெயில்(வண்டி எண்:-02552) சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு யஷ்வந்தபுரத்தை வந்தடையும்.
வருகிற 14-ந் தேதி யஷ்வந்தபுரத்தில் இருந்து காமக்யாவுக்கும், 17-ந் தேதி காமக்யாவில் இருந்து யஷ்வந்தபுரத்திற்கும் இந்த சிறப்பு ரெயில் சேவை தொடங்குகிறது. இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்டிரல், கூடூர், விஜயவாடா, சமல்கோட், விஜியநகரம், பெர்காம்பூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், பாலசோர், ஹிசிலி, மிட்னாபூர், பன்குரா, அத்ரா, அசன்சோல், துர்காபூர், ராம்பூர்காட், மால்டா டவுன், பர்சோய், கிஷன்கஞ்ச், நியூ ஜல்பைகுரி, நியூ கோச்பேகர், நியூ அலிபுர்துர், நியூ பங்கோய்கன், ரங்கியா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயிலில் ஒரு ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியும், 4 ஏ.சி. 2-ம் வகுப்பு பெட்டியும், 12 ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டியும், ஜெனரேட்டருடன் கூடிய 2 லக்கேஜ் பெட்டிகளும், ஏ.சி.யுடன் கூடிய ஒரு பேன்ட்ரி காரும் பொருத்தப்பட்டு இருக்கும். ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் சானிடைசர் திரவம் பயன்படுத்துவதுடன், முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.