கரும்பு நிலுவை தொகையை வழங்க கோரி கல்லறையில் குகை போல் அமைத்து விவசாயி போராட்டம்

பெலகாவி அருகே கரும்பு நிலுவை தொகையை வழங்க கோரி விவசாயி ஒருவர் கல்லறையில் குகை போல் அமைத்து போராட்டம் நடத்தி வருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-10-10 22:27 GMT
பெலகாவி, 

கர்நாடகத்தில் 200-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன. குறிப்பாக சாம்ராஜ்நகர், மண்டியா, பெலகாவி, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் கரும்புசாகுபடி செய்யப்படுகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் அதிகளவில் சர்க்கரை ஆலைகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்த கரும்புகளுக்கு விவசாயிகளுக்கு கொள்முதல் தொகையை வழங்காமல் நிலுவையில் வைத்து உள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் அவர்கள் கரும்பு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்றும், இதனை பெற்றுத்தர கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா எம்.கே.உப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தா போகரா (வயது 50). விவசாயி. இவர் தனது விளைநிலத்தில் கரும்பு சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் அந்தப் பகுதியில் உள்ள மல்லபிரபா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தனது விளைநிலத்தில் விளையும் கரும்புகளை விற்பனை செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு (2019) அக்டோபர் மாதம் 114 டன் கரும்புகளை அவர், அந்த சர்க்கரை ஆலைக்கு விற்றுள்ளார். இதற்கு ரூ.85 ஆயிரத்தை அந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை அந்த நிலுவை தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர் பல முறை, ஆலை நிர்வாகத்திடம் கேட்டும் வழங்கவில்லை. இதனால் மனம் உடைந்த சிவானந்தா போகரா, தனது விளைநிலத்தில் குகை போல் கல்லறை அமைத்து அதில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் இந்த போராட்டத்தை அவர் தொடங்கினார்.

2-வது நாளாகவும் அவர் நேற்றும் இந்த போராட்டத்தை தொடர்ந்தார். தனக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவையை உடனே வழங்க வேண்டும். இல்லையெனில் சாகும் வரை இந்த போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். ஆனால் ஆலை நிர்வாகங்கள் சரியாக கரும்புக்கான தொகையை வழங்குவதில்லை. ஒரு ஆண்டு, 2 ஆண்டு என இழுத்தடித்து வழங்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, ஆலை நிர்வாகங்கள் உடனே கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஆலை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்