‘அ.தி.மு.க. வழிகாட்டு குழுவில் இடம் பெறாதது மகிழ்ச்சி அளிக்கிறது’ - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
அ.தி.மு.க. வழிகாட்டு குழுவில் இடம் பெறாதது மகிழ்ச்சி அளிக்கிறது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பெரியகொடிவேரி பேரூராட்சியில் சந்தை கடை மேம்பாட்டு பணிக்காக ரூ.1 கோடியே 67 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டும் அளவுக்கு தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்கள் சேர கால நீட்டிப்பு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் தயாராகி வருகிறது. கட்டாய கல்வி திட்டத்துக்காக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இதுவரை தனியார் பள்ளிகளுக்கு ரூ.943 கோடி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் ரூ.372 கோடி நிதி துறையின் பரிசீலனையில் உள்ளதால், இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார்.
எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய கல்வி மூலம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மராட்டிய மாநிலத்தில் தமிழ் பள்ளிகளை ஊக்குவிக்கும் நோக்கில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறாதது குறித்த நிருபர்களின் கேள்விக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளிக்கையில், ‘மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.