நித்திரவிளை அருகே, பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது
நித்திரவிளை அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நித்திரவிளை,
நித்திரவிளை அருகே எஸ்.டி. மங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தனபாலன், பிளம்பராக உள்ளார். இவருடைய 14 வயது மகள் மற்றும் மகன் இருவரும் தங்களது பாட்டியை பஸ்சில் ஏற்றி வழியனுப்புவதற்காக கடந்த மாதம் 27-ந் தேதி சென்றனர்.
அங்கு வழியனுப்பி விட்டு வீடு திரும்பிய போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் வழிமறித்து தனபாலன் மகள் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நித்திரவிளை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் நெய்யூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அபினேஷ் (21, திங்கள்சந்தை பகுதியைச் சேர்ந்த லூயிஸ் ஆன்றணி மகன் ஆன்றோ ஜெயின் (19) என்பதும், தனபாலன் மகளிடம் நகை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.