குழந்தை பிறந்த 5-வது நாளில் காண்டிராக்டர் தற்கொலை - நண்பர்களுக்கு தகவல் கூறிவிட்டு உயிரை மாய்த்த சோகம்

சாமிதோப்பு அருகே கொரோனா ஊரடங்கால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் குழந்தை பிறந்த 5-வது நாளில் நண்பர்களுக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு காண்டிராக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு.

Update: 2020-10-05 06:30 GMT
தென்தாமரைகுளம்,

குமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே சோட்டப்பணிக்கன் தேரிவிளையை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 31). இவர் வீடுகளில் மார்பிள், டைல்ஸ் பதிக்கும் காண்டிராக்டராக தொழில் செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

அத்துடன் குடும்ப செலவை எதிர்கொள்ள பணம் இல்லாமல் அவதியடைந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்புற்று அவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.

நேற்று காலையில் மாரியப்பன் வடக்கு தாமரைகுளம் பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங் பகுதிக்கு சென்றார். அங்கிருந்தபடி தன்னுடைய நண்பர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘எனக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டுள்ளது, புதிய தொழில்கள் இல்லாததால் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

பின்னர் தான் கொண்டு சென்ற விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதற்கிடையே அவரது நண்பர்கள் மாரியப்பன் இருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மாரியப்பன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே மாரியப்பனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த மாரியப்பனுக்கு மஞ்சு (28) என்ற மனைவியும், 1½ வயதில் ஒரு மகளும், பிறந்து 5 நாட்கள் ஆன ஒரு மகனும் உள்ளனர். குழந்தை பிறந்த 5-வது நாளில் தந்தை தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்