அதிகரித்து வரும் கொரோனா பரவல் வீதிகளில் கிருமி நாசினி தெளிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

Update: 2020-10-05 00:26 GMT
ஈரோடு,

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்படுத்த முடியாத மாவட்டங்களில் ஒன்றாக ஈரோடு உள்ளது. இங்கு தினசரி 150-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

கடந்த 2-ந் தேதி ஒரே நாளில் 194 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 118 ஆக உயர்ந்தது. மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் 91 ஆக உயர்ந்து உள்ளது. தினசரி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

நேற்று முன்தினம் வரை ஈரோடு மாவட்டத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் தனிமை முகாம்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் எண்ணிக்கை, 164 ஆக இருந்தது. இதுவரை 5 ஆயிரத்து 863 பேர் குணம் அடைத்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

ஊரடங்கு தளர்வு

ஈரோடு மாவட்டத்தில் தினசரி 10-க்கும் குறைவானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நேரத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக பொது மக்கள் சாதாரணமாக நடமாடி வருகிறார்கள்.

ஊரடங்கு தளர்வு என்பது பொருளாதார பாதிப்புகள், தொழில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

கிருமி நாசினி

வைரஸ் பரவலில் இருந்து நமக்கு நாமே பாதுகாப்பு அளித்துக்கொள்ள வேண்டும். கவனமாக இருப்பதுடன் கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டும் வருகிறார்கள்.

மேலும் செய்திகள்