எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளி பகுதியில் 616 விவசாயிகளுக்கு ரூ.3½ கோடி காப்பீட்டு தொகை அமைச்சர் தகவல்

எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளி பகுதியில் 616 விவசாயிகளுக்கு ரூ.3½ கோடி காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

Update: 2020-10-04 23:41 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 2016-17-ம் ஆண்டில் மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து இழப்பீட்டுத் தொகை பெறப்பட்டு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளி பிர்காவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை நீண்டகாலம் வழங்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக விவசாயிகளும் என்னிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளிடம் நேரடியாக வலியுறுத்தப்பட்டது.

ரூ.3½ கோடி

இதனை காப்பீட்டு நிறுவனம் ஏற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின் படி, படர்ந்தபுளி பிர்காவில் உள்ள பகுதிகளை ஆய்வு செய்தும், ஆவணங்களை சரிபார்த்தும் 2016-17-ம் ஆண்டு மக்காச்சோளப் பயிருக்கு பயிர்க்காப்பீடு செய்த 616 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 67 லட்சத்து 43 ஆயிரத்து 912-ஐ காப்பீட்டு நிறுவனம் விடுவித்து உள்ளது.

இந்த தொகை அந்தந்த விவசாயிகளின் மத்திய கூட்டுறவு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. எனது முயற்சியால் ஏற்கனவே குறைந்த அளவிலான இழப்பீட்டு தொகை பெறப்பட்ட விவசாயிகளுக்கு தற்போது முழு இழப்பீட்டு தொகையும் பெறப்பட்டு உள்ளது.

எனவே படர்ந்தபுளி பிர்காவில் உள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு நேரில் சென்று உரிய கணக்கு ஆவணங்களுடன் காப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்