புதிதாக 343 பேருக்கு தொற்று வாலிபர் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி 419 பேர் குணமடைந்தனர்

புதுவையில் நேற்று 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வாலிபர் உள்பட 5 பேர் பலியாகினர். 419 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2020-10-04 22:35 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் மத்திய நிபுணர்கள் குழு அறிவுறுத்தலின்படி நாள்தோறும் அதிகம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 725 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 343 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 419 பேர் குணமடைந்து உள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இறப்பு விகிதம் குறைந்து காணப்படுகிறது. நேற்று கொரோனா பாதிப்பை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இதுவரை 2 லட்சத்து 2 ஆயிரத்து 784 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 172 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. 29 ஆயிரத்து 89 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 4,787 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,643 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3,144 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23,763 பேர் குணமடைந்துள்ளனர்.

5 பேர் உயிரிழப்பு

புதுவையில் இதுவரை 539 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 452 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 45 பேர் காரைக்காலையும், 42 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, ஜிப்மர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வந்த கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த 75 வயது முதியவரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எம்போனி தோட்டம் பகுதியை சேர்ந்த 43 வயது ஆணும், அம்பகரத்தூர் பகுதியை சேர்ந்த 81 வயது மூதாட்டியும், கோவில்பத்து பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபரும், காரைக்காலை சேர்ந்த 72 வயது முதியவரும் பலியாகி உள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.85 சதவீதமாகவும், குணமடைவது 81.69 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி ஆய்வு

புதுவையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி ரெயின்போ நகரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கு சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்