மோட்டார் சைக்கிள் மோதியதால் தகராறு: ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை 2 பேரை போலீஸ் தேடுகிறது

மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் ஏற்பட்ட தகராறில் ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2020-10-04 21:38 GMT
பெங்களூரு,

பெங்களூரு விஞ்ஞானநகரை சேர்ந்தவர் அருண் (வயது 24). இவர், காபி ஷாப்பில் முதலில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இதனால் வேலைக்கு எங்கும் செல்லாமல் அருண் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர், நண்பரை பார்க்க சென்றிருந்தார். பின்னர் இரவு 8 மணியளவில் விபூதிபுரா மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் அருண் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அதே சாலையில் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது அருணின் மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிகிறது. இதுதொடர்பாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர், அருணுடன் தகராறில் ஈடுபட்டனர். இந்த நிலையில், திடீரென்று ஆத்திரமடைந்த 2 நபர்களும் தாங்கள் வைத்திருந்த கத்தி, கூர்மையான ஆயுதங்களால் அருணை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அவர் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

வாலிபர் கொலை

உயிருக்கு போராடிய அருணை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கு சென்று அருணின் உடலை கைப்பற்றியும் எச்.ஏ.எல். போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், மோட்டார் சைக்கிள் மோதிய விவகாரத்தால் ஏற்பட்ட தகராறில் அருண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் அருண் கொலைக்கு வேறு ஏதும் காரணமா?, அருணை கொலை செய்த அந்த 2 நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து எச்.ஏ.எல். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 மர்மநபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்