ஏற்காட்டில், வடமாநில தம்பதி கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த தொழிலாளி படுகொலை - உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
ஏற்காட்டில் வடமாநில தம்பதி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளியும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்காடு,
ஜார்கண்ட் மாநிலம் கூட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோண்டாபகன் (வயது 41). இவருடைய மனைவி சுதிகேன்ஸ் (36). ஏற்காடு பகுதியில் ஒரு எஸ்டேட்டில் உள்ள குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்த இந்த தம்பதி கடந்த 29-ந் தேதி அன்று படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அதே எஸ்டேட்டில் வேலைபார்த்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த புத்ராம் என்பவரின் கர்ப்பிணி மனைவிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுதிகேன்ஸ் நாட்டு மருந்து கொடுத்துள்ளார். ஆனால் புத்ராமின் மனைவி திடீரென இறந்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த புத்ராம் தனது கர்ப்பிணி மனைவியின் சாவுக்கு பழி வாங்கும் வகையில், தம்பதியை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அதே எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளிகளும், புத்ராமின் கூட்டாளிகளான முச்ரே (25), சுக்ராம் (21), ராம்நாத் (39) ஆகிய 3 பேரை ஏற்காடு போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த புத்ராம் மற்றும் அவருடைய மற்றொரு கூட்டாளியான எஸ்டேட் கூலித்தொழிலாளி ஹைரா போத்ரே ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தம்பதி கொலை செய்யப்பட்ட அதே எஸ்டேட்டில், தலைமறைவாக இருந்த ஹைரா போத்ரேவின் உடல் கழுத்தறுக்கப்பட்டு, முகம் அழுகிய நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. அருகில் ஒரு கத்தியும் கிடைத்தது.
இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் புத்ராம் தான் ஹைரா போத்ரேவையும் கொலை செய்து விட்டு தப்பிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.