ராமநாதபுரத்தில் மக்கள் நீதிமன்றம்: விபத்து வழக்குகளில் ரூ.1¼ கோடி இழப்பீடு வழங்க தீர்வு
ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் விபத்து வழக்குகளில் ரூ.1¼ கோடி இழப்பீடு வழங்க தீர்வு காணப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. தாழ்த்தப்பட்டோருக்கான நீதிமன்ற நீதிபதி தனியரசு, குடும்ப நல கோர்ட்டு நீதிபதி பகவதியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-கோர்ட்டு நீதிபதி ப்ரீத்தா, சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி தங்கராஜ், நீதித்துறை நடுவர் எண்.1 நீதிபதி ஜெனிதா, வக்கீல் சங்க தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, செயலாளர் நம்புநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து தொடர்பான 41 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 24 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 36 லட்சத்து 11 ஆயிரம் வழங்க தீர்வாகி உள்ளது. இதேபோல, சிவில் தொடர்பான 4 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 4 வழக்குகளும் முடிவு காணப்பட்டது.
ராமநாதபுரம் அருகே விபத்தில் பலியான நூர் முகம்மது என்பவரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடாக வழங்கவும், படுகாயம் அடைந்த முகம்மதுராபத் தரப்பிற்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக மதுரை இன்சூரன்சு நிறுவனம் வழங்க நீதிபதி சண்முகசுந்தரம் முன்னிலையில் சமரசதீர்வாகி முடிவானது.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பிர் வக்கீல் தர்மர் ஆஜரானார்.