கிரிவலப்பாதையில் நவீன வசதிகள் கொண்ட பஸ் நிறுத்தம் 3 இடங்களில் அமைப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நவீன வசதிகள் கொண்ட பஸ் நிறுத்தம் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-04 04:35 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக கிரிவலப்பாதையை மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் பணிகள் மேற்கொள்ள அரசு சுமார் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கிரிவலப்பாதையில் சாலை விரிவாக்கம், கால்வாய் அமைக்கும் பணி, நடைபாதை அமைக்கும் பணி, சிறு பாலங்கள் கட்டும் பணி, மரக்கன்றுகள் நடுதல், எல்.இ.டி. மின் விளக்குகள் அமைத்தல், சிமெண்டு நாற்காலிகள் அமைத்தல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் கிரிவலப்பாதையில் பல்வேறு இடங்களில் நிழற்குடைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அறிவுறுத்தலின் பேரில் கிரிவலப்பாதையில் நவீன வசதிகள் கொண்ட பஸ் நிறுத்தம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நவீன பஸ் நிறுத்தத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை எரியும் வகையில் சோலார் மின் விளக்குகளும், பயணிகள் அமர இரும்பு நாற்காலிகளும், தரையில் டைல்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. சாலையை கடக்கும் போது பின்பற்ற வேண்டிய சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் புகைப்படங்களும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த நவீன வசதிகள் கொண்ட பஸ் நிறுத்தத்தின் மதிப்பு ரூ.8 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே கிரிவலப்பாதையில் 6 இடங்களில் இந்த நவீன பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று கிரிவலப்பாதையில் இடுக்குபிள்ளையார் கோவில் அருகில், குபேர லிங்கம் கோவில் எதிரில், அபய மண்டபம் அருகில் என 3 இடங்களில் இந்த நவீன பஸ் நிறுத்தம் அமைக்கும் பணிகள் நடந்தது.

இந்த பஸ் நிறுத்தமானது ராட்சத கிரேன்கள் மூலம் தூக்கி வைக்கபட்டது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஆச்சரியாமாக கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்