பல்லடம் அருகே அசாம் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் 2 பேர் கைது - மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

பல்லடம் அருகே அசாம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்ட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2020-10-04 00:21 GMT
பல்லடம்,

அசாம் மாநிலத்தை சேர்ந்த 27 வயது பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் தமிழகத்துக்கு வேலை தேடி வந்தார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்தார். அதன்பின்னர் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் சரவணம்பட்டியில் வசித்து வந்தார்.

திண்டுக்கல்லில் உள்ள ஒரு மில்லில் அசாம் பெண் வேலை பார்த்த போது ராஜேஷ்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் பேசிய ராஜேஷ்குமார் தான் தற்போது திருப்பூரில் வேலை செய்துவருவதாகவும், திருப்பூருக்கு வந்தால் நல்லவேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதனால் அது பற்றி விசாரிக்க அந்த பெண் திருப்பூர் வந்தார். பின்னர் ராஜேஷ்குமாருடன் தொடர்புகொண்டு அந்த பெண் பேசியபோது அவர் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்திற்கு வரும்படி கூறினார்.

அங்கு அந்த பெண் வந்ததும், ராஜேஷ்குமார் மோட்டார்சைக்கிளில் குங்குமம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததால் இரவு நேரம் ஆகிவிட்டது. இதனால் கோவை செல்வதற்கு தன்னை யாராவது பஸ் நிலையத்தில் கொண்டு விடும்படி அந்த பெண் கூறினார். அதைத்தொடர்ந்து அந்த பெண்ணை ராஜேஷ்குமாரின் தம்பி ராஜூ மோட்டார் சைக்கிளில், அழைத்து சென்றார். கள்ளிமேடு-உகாயனூர் ரோட்டில் பாறைகுழி அருகே மோட்டார்சைக்கிள் சென்ற போது பழுதானது போல் வண்டியை நிறுத்தி சரிபார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது ராஜுவின் நண்பர்கள் 4 பேர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவரது செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதனைத்தொடர்ந்து கணவருடன் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்த அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார், இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்லடம் ஆலூத்தூபாளையம் பிரிவை சேர்ந்த ராஜு (22), பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்த அன்புச்செல்வன் (21), பல்லடம் காளிவேலம்பட்டியை சேர்ந்த கவின்குமார் (21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ராஜேஷ்குமார் உள்பட 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.

அவர்களை பிடிக்க பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீராமச்சந்திரன், அவினாசி இன்ஸ்பெக்டர் அருள், மகளிர் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஒருவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பல்லடம் மகாலட்சுமி நகரை சேர்ந்த கலைவாணன் மகன் தாமோதரன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் பொள்ளாச்சியில் பதுங்கியிருந்த ராஜேஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தாராபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்