கணவர் உள்பட 3 பேரை தாக்கிவிட்டு புதுப்பெண் காரில் கடத்தல் - கும்பலுக்கு வலைவீச்சு
கோபி அருகே கணவர் உள்பட 3 பேரை தாக்கிவிட்டு புதுப்பெண்ணை காரில் கடத்திச்சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அவ்வையார்பாளையத்தைச் சேர்ந்தவர் அசோக் (வயது 25). நயினாம் பாளையத்தைச் சேர்ந்தவர் சவுந்தரநாயகி (22). அசோக்கும், சவுந்தரநாயகியும் கோபியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் சவுந்தரநாயகியின் வீட்டுக்கு தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சவுந்தரநாயகியின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதைத்தொடர்ந்து அசோக்கும், சவுந்தரநாயகியும் கடந்த மாதம் 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் திருமணம் செய்து கொண்டு, கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் அசோக்கின் பெற்றோர் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் சவுந்தரநாயகியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து அசோக், சவுந்தரநாயகியை அவ்வையார்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சவுந்தரநாயகியிடம் உறவினர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘உன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உடனே வர வேண்டும்’ என்று அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சவுந்தரநாயகி கணவர் அசோக்கை அழைத்துக்கொண்டு காரில் நயினார்பாளையத்துக்கு விரைந்தார். அவர்களுடன் அசோக்கின் தம்பி பரணீதரன், நண்பர் சூர்யா ஆகியோரும் சென்றனர்.
சவுந்தரநாயகியின் வீட்டு முன்பு 4 பேரும் காரை விட்டு இறங்கியதும், 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் இருந்து திபுதிபுவென ஓடிவந்தது. இதை 4 பேரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடீரென அந்த கும்பல், சவுந்தரநாயகியை தரதரவென வீட்டுக்குள் இழுத்து சென்று ஒரு அறைக்குள் தள்ளி பூட்டி வைத்தனர்.
அதன்பின்னர் அந்த கும்பல் அசோக், பரணீதரன், சூர்யா ஆகிய 3 பேரையும் கிரிக்கெட் ஸ்டம்புகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கத்தியால் கீறி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து அந்த கும்பல், சவுந்தரநாயகியை இழுத்து வந்து காருக்குள் பிடித்து தள்ளினர். பின்னர் அவரை கடத்திக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இளம்பெண்ணை சினிமா பாணியில் காரில் கடத்திச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.