ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் உயிரிழந்த கொரோனா பாதித்த பெண் - வீடியோவால் பரபரப்பு
சந்திராப்பூரில் ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் கொரோனா பாதித்த பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு அனைத்து வசதிகளும் இருப்பதாக மாநில அரசு கூறி வருகிறது. இந்தநிலையில் சந்திராப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் உரிய நேரத்தில் ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. பரபரப்பை ஏற்படுத்தி உள்ள அந்த வீடியோவில் உள்ள காட்சிகளின் விவரமாவது:-
சந்திராப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். ஆனால் அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை. இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. எனவே அவர் விரைவில் ஆக்சிஜன் வசதி தருமாறு அங்குள்ளவர்களிடம் கேட்கிறார். இந்தநிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்.இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் அஜய் குல்கானே கூறுகையில், ’சமூகவலைதளத்தில் பரவி வரும் வீடியோவை அரசு மருத்துவ கல்லூரி டீன், ஆஸ்பத்திரி மூத்த அதிகாரிக்கு அனுப்பி அது குறித்து அறிக்கை கேட்டு உள்ளேன்‘ என்றார். இதற்கிடையே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததை கண்டித்து ஆஸ்பத்திரிக்கு வெளியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.