சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு: குற்றாலம் வெறிச்சோடியதால் ஆட்டோ டிரைவர்கள் தவிப்பு - வாழ்வாதாரத்தை இழந்த பரிதாபம்

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து ஆட்டோ டிரைவர்கள் தவித்து வருகிறார்கள்.

Update: 2020-10-03 22:15 GMT
தென்காசி,

கொரோனா என்ற ஒற்றை வார்த்தை உலகையே புரட்டி போட்டு விட்டது. அதற்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான குற்றாலமும் தப்பவில்லை. கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இதனால் அருவிகளில் தண்ணீர் விழுந்தும் குளிக்க ஆட்கள் இல்லை.

மேலும், குற்றாலத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும், கடைகளும் மூடி கிடக்கின்றன. இதனால் குற்றாலமே வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே ஓரிரு டீக்கடைகள் மட்டும் செயல்படுகின்றன. சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால், ஆட்டோ டிரைவர்களும் வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் குற்றாலம் பஸ் நிலையத்துக்கு எதிரே உள்ள ஆட்டோ நிறுத்தம் வெறிச்சோடி கிடக்கிறது.\

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கி நடந்து வருவதாலும், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருவதாலும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனாலும், குற்றாலம் செல்ல அனுமதி மறுக்கப்படுவது சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து குற்றாலம் ஆட்டோ உரிமையாளர் தொழிற்சங்க தலைவர் ராமையா கூறியதாவது:-

குற்றாலத்தில் பஸ் நிலையம் அருகில், ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள ரவுண்டானா பகுதி ஆகிய 2 இடங்களிலும் ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன. இங்கு சுமார் 200 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. அந்த ஆட்டோக்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் அனைவரும் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள்.

பொதுவாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குற்றாலத்தில் சீசன் நன்றாக இருக்கும். அப்போது அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். தற்போது மழைக்காலம் என்பதால் அருவிகளில் தண்ணீர் விழுகிறது. ஆனாலும், இங்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்காததால், ஆட்டோ டிரைவர்கள் வருமானம் இழந்து தவித்து வருகிறோம். எங்களது ஆட்டோக்களை வீடுகளின் அருகிலேயே பல மாதங்களாக நிறுத்தி வைத்து உள்ளோம்.

குற்றாலம் சீசன் நேரத்தில் ஆட்டோக்களுக்கு தேவையான செலவு போக சராசரியாக நாளொன்றுக்கு ரூ.1,000 கூலி கிடைக்கும். 3 மாதங்களில் சுமார் ரூ.1 லட்சம் வரையிலும் வருமானம் கிடைக்கும். இதை வைத்துதான் ஆண்டு முழுவதும் நாங்கள் குடும்ப செலவுகளை சமாளித்து வந்தோம். சீசன் இல்லாத காலத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.200 மட்டுமே கிடைக்கும். இதனால் குடும்பத்தை நகர்த்தவே பெரிதும் சிரமப்படுகிறோம்.

தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு நிலைமை சீராக உள்ளது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், குற்றாலத்தில் மட்டும் எந்த தளர்வுகளும் அளிக்கப்படாதது வேதனை அளிக்கிறது.

எங்களில் 12 பேருக்கு மட்டுமே அரசு அளித்த நிவாரணத்தொகை கிடைத்துள்ளது. ஆட்டோ ஓட்டும் தொழிலை நம்பித்தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். நாங்கள் வேறு இடத்திற்கு சென்று ஆட்டோக்கள் ஓட்டவும் இயலாது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். எனவே, அரசு குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு உடனடியாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்