பெத்தநாயக்கன்பாளையத்தில் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சாலையில் கிடந்ததால் பரபரப்பு

பெத்தநாயக்கன்பாளையத்தில் கொரோனா பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்ட மாதிரிகள் அடங்கிய டெஸ்ட் டியூப் சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-03 06:27 GMT
பெத்தநாயக்கன்பாளையம்,

தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனாவுக்காக 87 பேருக்கு சளி பரிசோதனை செய்வதற்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது. இவை டெஸ்ட் டியூப்பில் வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு பரிசோதனைக்காக எடுக்கப்படும் மாதிரிகள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பது குறித்து அறிக்கை வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று பரிசோதனை மாதிரிகள் அடங்கிய டெஸ்ட் டியூப்பை எடுத்துக் கொண்டு ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது 8-க்கும் மேற்பட்ட டெஸ்ட் டியூப்கள் பெத்தநாயக்கன்பாளையம் பைபாஸ் சாலையில் தவறி விழுந்துள்ளன. அந்த மாதிரிகளில் இன்றைய தேதியில் எடுக்கப்பட்ட பரிசோதனை என எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக ஆத்தூர் துணை மாவட்ட சுகாதார இயக்குனர் செல்வகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு வந்து தரையில் கிடந்த அவற்றை சேகரித்து எவ்வாறு இந்த தவறு நடந்துள்ளது? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனை மாதிரிகள் அடங்கிய டெஸ்ட் டியூப் கிடந்த இடத்தில் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து சுகாதார துணை இயக்குனர் செல்வகுமார் கூறும்போது, தவறுதலாக இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கிராமத்திற்கு மீண்டும் சென்று பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்படும், என்றார்.

மேலும் செய்திகள்