ராமநாதபுரம் வாலிபரின் வங்கி கணக்கில் இருந்து கூகுள்பே மூலம் ரூ.5½ லட்சம் மோசடி

ராமநாதபுரம் வாலிபரின் வங்கி கணக்கில் இருந்து கூகுள்பே மூலம் ரூ.5 லட்சத்து 59 ஆயிரம் மோசடி செய்தவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Update: 2020-10-03 06:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தை அடுத்துள்ள தொருவளுர் அருகே உள்ளது காரேந்தல். இந்த ஊரைச்சேர்ந்தவர் காசிமுருகன் மகன் செல்லத்துரை (வயது35). இவர் துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் தனது குடும்ப செலவிற்காக ராமநாதபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.8 லட்சத்து 9 ஆயிரத்து 40 வைத்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் ஊருக்கு திரும்பி வந்த நிலையில் குடும்ப தேவைக்காக பிப்ரவரி மாதம் ரூ.50 ஆயிரம் மட்டும் தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்துள்ளார்.

இதன்பின்னர் கடந்த மார்ச் மாதம் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் எடுத்து தனது 2 பிள்ளைகளின் பெயரில் டெபாசிட் செய்ய சென்றுள்ளார். அப்போது அவரின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் மட்டுமே இருப்பு உள்ளதாக தெரிவித்ததால் மீதம் உள்ள பணம் என்ன ஆனது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து வங்கியில் விசாரித்தபோது அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 லட்சத்து 59 ஆயிரம் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனக்கு தெரியாமல் எப்படி பண பரிமாற்றம் செய்யப்பட்டது என்று விசாரித்தபோது உறவினரான அரசன்ராய் என்பவர் ஆன்லைன் மூலம் கூகுள்பே வழியாக பணம் பரிமாற்றம் செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கடந்த முறை செல்லத்துரை சொந்த ஊருக்கு வந்தபோது தனது செல்போன் எண்ணின் வழியாக கூகுள்பே மூலம் பணம் பரிமாற்றம் செய்துள்ளார். அந்த எண்ணுடன் செல்போனை தனது தாயிடம் கொடுத்துவிட்டு துபாய் சென்றுவிட்டாராம்.

இதன்பின்னர் அவர்களின் வீட்டிற்கு வந்த அரசன்ராய் அந்த செல்போனை பார்த்தபோது அதில் கூகுள்பே வழியாக பணம் பரிமாற்றம் செய்த குறுஞ்செய்தி இருந்துள்ளது. இதன்மூலம் வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பதையும் அந்த எண்ணைதான் கூகுள்பே கணக்கில் கொடுத்துள்ளதையும் அறிந்து அந்த பணத்தினை அபகரிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக செல்லத்துரையின் அம்மாவிடம் இருந்த செல்போனை வாங்கி அதில் இருந்து ரூ.5 லட்சத்து 59 ஆயிரம் பணத்தினை தனது கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார். அதற்கான குறுஞ்செய்தி வந்ததும் அதனை உடனடியாக அழித்துவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல் சென்றுவிட்டார்.

செல்போனும் குறுஞ்செய்தி வரும் எண்ணும் ஒருசேர இருந்ததால் எப்படி பணம் போனது என தெரியாமல் வீட்டில் உள்ளவர்கள் மேல்தான் சந்தேகம் வரும் தான் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்று பணத்தினை பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளார். தனது பணத்தினை உறவினரே அபகரித்ததை அறிந்து ஆத்திரமடைந்த செல்லத்துரை இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தபோது அரசன்ராய் குற்றத்தை ஒப்புக்கொண்டு ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்துவிட்டு மீதம் உள்ள ரூ.4 லட்சத்து 59 ஆயிரத்தை விரைவில் தருவதாக உறுதி கொடுத்தாராம். ஆனால் ஒப்புக்கொண்டபடி பணத்தினை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து செல்லத்துரை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குபதிவு செய்து அரசன்ராயை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்