போதைப்பொருள் விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்றதால் நான் குற்றவாளி இல்லை; வீடியோவில் நடிகை அனுஸ்ரீ கண்ணீர் விட்டு கதறல்

போதைப்பொருள் விவகாரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்றதால் நான் குற்றவாளி ஆகி விட மாட்டேன் என்று நடிகை அனுஸ்ரீ, வீடியோவில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-03 00:31 GMT
பெங்களூரு,

கன்னட திரைஉலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக இந்தி நடிகர் கிஷோர் ஷெட்டியை மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட நடிகை அனுஸ்ரீக்கு தொடர்பு இருப்பது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த மாதம் (செப்டம்பர்) நடிகை அனுஸ்ரீயிடம் மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டு இருந்தனர். மேலும் அவர் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று நடிகை அனுஸ்ரீ தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க பேசியதாவது:-

போதைப்பொருள் விவகாரத்திற்கும் எனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. செப்டம்பர் மாதம் 24-ந் தேதி என்னுடைய வாழ் நாளில் மறக்க முடியாத தினமாகும். அன்றைய தினம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. போலீஸ் விசாரணைக்கு சென்று போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தேன். போலீஸ் விசாரணைக்கு சென்றதால் நான் குற்றவாளி ஆகி விட மாட்டேன். நான் குற்றவாளியும் இல்லை. இந்த விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை பலமுறை தெரிவித்துவிட்டேன்.

ஆனால் போலீஸ் விசாரணைக்கு சென்றதால் போதைப்பொருள் விவகாரத்தில் என்னை குற்றவாளியாகவே நினைக்கின்றனர். சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடப்படுகின்றன. சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்யும் முன்பாக தங்களுக்கும் ஒரு வாழ்க்கை, குடும்பம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பிறருக்கு வேதனையை கொடுக்காதீர்கள். போதைப்பொருள் விவகாரம் காரணமாக கடந்த ஒரு வாரமாக எங்கள் வீட்டில் நிம்மதி இல்லை. மிகுந்த வேதனையாக உள்ளது. நான் இந்த அளவு வளர்ச்சி அடைவதற்கு மக்கள் காட்டிய அன்பே காரணமாகும்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை அனுஸ்ரீ பெயர் வெளியானதை தொடர்ந்து அவர் அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கஞ்சாம் பகுதியில் உள்ள நிமிசாம்பா கோவிலுக்கு சென்று நடிகை அனுஸ்ரீ சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

மேலும் செய்திகள்