கூலித்தொழிலாளி கொலை வழக்கில் இறைச்சி கடை உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு

குமாரபாளையம் அருகே கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இறைச்சி கடை உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2020-10-02 05:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூரை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் அங்குள்ள மதுபான கடையில் கழிவு அட்டை மற்றும் பாட்டில்களை பொறுக்கி விற்பனை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி டாஸ்மாக் கடைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. மறுநாள் அங்குள்ள ஓடையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்த கொலை வழக்கில் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் அசாருதீன் (வயது 23), அவரது உறவினர் சித்திக் (40) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மது குடிக்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் தார் மற்றும் ஜல்லிகற்களால் ஆன கட்டியால் தாக்கியதில் ரத்தினம் இறந்து இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கு நாமக்கல் எஸ்.சி.எஸ்.டி. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் மாதேஸ்வரன் வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி தனசேகரன் குற்றம் சாட்டப்பட்ட அசாருதீனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து அசாருதீனை போலீசார் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சித்திக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் ஏற்கனவே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்