குடும்ப அட்டை நகல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ரூ.20 கட்டணம் செலுத்தினால் போதும்

குடும்ப அட்டை நகல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கு ரூ.20 மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டும்.

Update: 2020-10-02 05:00 GMT
மதுரை,

தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அதில் மதுரை உள்பட 6 மாவட்டங்களில் மட்டும் இந்த திட்டம் 16-ந் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்படி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், இனி நாடு முழுவதும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம். அதாவது ரேஷன் கார்டுகள் ஏற்கனவே ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரேஷன் கடையில் உள்ள பயோமெட்ரிக் எந்திரம் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்து பொருட்களை பெற்று கொள்ளலாம். இதற்கு முன்பு ஒருவரின் குடும்ப அட்டை மூலம் மற்றவர்கள் பொருட்கள் வாங்கலாம். ஆனால் இனி அதுபோல நடக்காது. சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களே நேரில் வந்து கை ரேகை பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் எந்திரம் பொருத்தும் பணி நடந்து வருகிறது. மதுரை உள்பட 6 மாவட்டங்களில் 15-ந் தேதிக்குள் இந்த பணி முடிக்கப்படும் என்று தெரிகிறது. மதுரையில் மொத்தம் 1,389 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் எந்திரம் பொருத்தும் பணி தொடங்குகிறது. அதன்பின் தான் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும்.

இதற்கிடையில் மதுரை மாவட்டத்தில் குடும்ப அட்டை நகல் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடனடியாக அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. அதாவது புதிய குடும்ப அட்டை, அட்டையில் பெயர் திருத்தம்-நீக்கம், முகவரி மாற்றம் செய்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெற முடியாத நிலை இருந்தது. தற்போது அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு குடும்ப அட்டையின் நகலை பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த இந்த பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.

எனவே குடும்ப நகல் அட்டை பெற விரும்புபவர்கள் நேரடியாக www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். அதில் கிடைக்கும் ஒப்புகை சீட்டினை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பின் நகல் அட்டை மாவட்ட வழங்கல் துறை மூலம் அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்திற்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும். அதன்பின் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டை நகல் பெற்று கொள்ளலாம். மதுரை மாவட்டத்தில் கடந்த 1 மாதத்தில் சுமார் 300 பேருக்கு குடும்ப அட்டை நகல் அச்சடித்து வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் குடும்ப அட்டை நகல் உள்பட புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது-நீக்குவது, ஆதார் எண் இணைப்பது, முகவரி மாற்றம், குடும்ப தலைவர் பெயர் மாற்றம் என அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது. அதே போல் விண்ணப்பம் செய்த பின், தங்களது விண்ணப்பத்தின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கலாம். பொதுமக்களே ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் இ-சேவை மையத்தையும், இணையதள மையங்களிலும் காத்து கிடக்கின்றனர். அதேபோல் இணையதள மையங்களில் ஒரு சேவைக்கு குறைந்தது ரூ.50 முதல் ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த நிலை மாறி பொதுமக்களே இந்த இணையதளத்தை நேரடியாக பயன்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்