குடியாத்தத்தில் ரோந்துசென்ற போலீஸ்காரருக்கு சரமாரி பிளேடு வெட்டு போதை ஆசாமிக்கு வலைவீச்சு

குடியாத்தத்தில் ரோந்து சென்ற போலீஸ்காரரை பிளேடால் சரமாரியாக வெட்டிய போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-10-02 03:45 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் அருண்கண்மணி (வயது 28). இவர் நேற்று இரவு 7 மணி அளவில் ரோந்து பணிக்கு புறப்பட்டார். குடியாத்தத்தை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்து நடந்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து அருண்கண்மணி அந்தப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது போலீஸ் நிலையம் அருகே தாழையாத்தம் பஜார் பகுதியில், குடியாத்தம் மேல்ஆலத்தூர் ரோடு, ஜோகிமடம் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (25) என்ற வாலிபர் குடிபோதையில் நின்றுகொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்து, ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதைக்கண்ட போலீஸ்காரர் அருண்கண்மணி, நவீன்குமாரை சமாதானம் செய்து வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமார், போலீஸ்காரர் அருண்கண்மணியையும் சரமாரியாக தாக்கி உள்ளார். கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க முயன்ற பொதுமக்களையும் மிரட்டியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் நவீன்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அதைத்தொடர்ந்து போலீஸ்காரர் அருண்கண்மணியை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நவீன்குமாரை தேடி வருகிறார்.

போலீஸ் நிலையத்திற்கு மிக அருகில் போலீஸ்காரரை, போதை ஆசாமி சரமாரியாக பிளேடால் வெட்டிய சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்