இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு கலெக்டர் கதிரவன் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-10-02 00:18 GMT
ஈரோடு,

குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்படும். ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சி திட்டங்களை திட்டமிடுதல், செயல்படுத்தப்படுதல், ஊராட்சி நிர்வாகத்தில் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் உள்ளிட்டவை கிராம சபைக் கூட்டத்தின் நோக்கமாகும்.

கிராம மக்களின் கையில் இருக்கும் அதிகாரமாக, கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் இருக்கிறது. கிராம சபை கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் டாஸ்மாக் மதுபான கடை நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அந்த கிராமங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஒத்திவைப்பு

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கிராம சபை கூட்டம், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் இயற்ற வேண்டும் என விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்