அரசு கட்டிட பூமி பூஜைக்கு அழைப்பு இல்லாததால் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

அரசு கட்டிட பூமி பூஜைக்கு அழைப்பு இல்லாததால் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-02 00:00 GMT
பூந்தமல்லி,

குன்றத்தூர் ஒன்றியம், மவுலிவாக்கம் ஊராட்சியில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நேற்று காலை நடைபெற்றது. இதற்காக அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் மற்றும் மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வதாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

விழா நடைபெறும் பகுதி ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக தா.மோ.அன்பரசனும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராக டி.ஆர்.பாலு ஆகியோரும் உள்ளனர். இருவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதால் அரசு விழாவில் பங்கேற்க இவர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அரசு விழாவில் பங்கேற்க தொகுதி எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பு விடுக்காமல் அ.தி.மு.க. விழாவைபோல் நடத்துவதாக கூறி எம்.எல்.ஏ. தா.மோ.அன்பரசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் பூமி பூஜை விழா நடைபெறும் இடம் அருகே ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

விழாவில் அரசு அதிகாரிகள் யாரும் இல்லாமல் அ.தி.மு.க. வினர் மட்டும் இருந்தனர். விழாவில் அமைச்சர் கலந்து கொண்டால் அவருக்கு கருப்பு கொடி காட்டவும் தி.மு.க.வினர் தயாராக இருந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாங்காடு போலீசார், அ.தி.மு.க.-தி.மு.க.வினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. வாக்குவாதம் செய்தார்.

பின்னர் போலீசாரின் சமரசத்தை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் விழாவில் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க வருவது ரத்தானது. உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளே பூமி பூஜை விழாவை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்