ஆத்தூரில் 12 பேருக்கு கொரோனா: கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை - அதிகாரிகள் குழு ஆய்வு
ஆத்தூரில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக ஆத்தூர் கிராமத்தில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். மேலும் கிராம மக்களிடம் சளி மாதிரியை சேகரித்து, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் தினேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு நேற்று காலை 11 மணிக்கு ஆத்தூர் கிராமத்தில் ஆய்வு நடத்தியது. அப்போது கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அதிகாரிகள் தடை விதித்தனர்.
அப்போது அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் இல்லை. எனவே வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டி உள்ளது. மேலும் கொரோனா பாதித்தவர்களை கவனிக்க முடியவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர். குறிப்பாக பலரது வீடுகளில் கழிப்பறை இல்லை. பொது கழிப்பறையை பயன்படுத்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸ்களில் கூடலூரில் உள்ள முஸ்லிம் அனாதை இல்ல பள்ளியில் செயல்பட்டு வரும் சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து, கண்காணித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஓவேலி பேரூராட்சி சார்பில் அந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. மேலும் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.