திட்டப்பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை தேவை - தேவகோட்டை யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்

திட்டப்பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவகோட்டை யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Update: 2020-10-01 09:30 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை யூனியன் கூட்டம் அதன் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், துணைத்தலைவர் ராஜாத்திநடராஜன், ஆணையாளர் இளங்கோ தாயுமானவர், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிதி நிலை அறிக்கை உள்பட வரவு, செலவு கணக்குகள், எதிர்கால திட்டங்கள் உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

யூனியன் தலைவர் பிர்லா கணேசன்: 15-வது நிதிக்குழுவின் நிதி முழுமையாக வராத காரணத்தால், அனைத்து வார்டுகளிலும் எடுக்கப்பட்ட வேலைகளுக்கு டெண்டர் விடப்படாமல் உள்ளது. வார்டுகளில் வேறு ஏதும் செய்யப்பட வேண்டிய பணிகள் இருந்தால் ஆணையாளரிடம் கூறவும். அவைகள் நிறைவேற்றி வைக்கப்படும்.

கவுன்சிலர் நாகணி ரவி: வார்டில் எந்த வேலையும் நடைபெறாததால் மக்களுக்கு எந்த பதிலையும் கூறமுடியவில்லை. இப்படியே நிலைமை இருந்தால் என்ன ஆவது. எதற்காக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டோம் என தோன்றுகிறது. கவுன்சிலராக இருப்பதைவிட ராஜினாமா செய்து விடலாம். வார்டுகளில் திட்டப்பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையாளர் இளங்கோ தாயுமானவர்: கவுன்சிலர்கள் பதவி ஏற்று மறு மாதமே கொரோனா தொற்று வந்து விட்டதால் 8 மாதமாக திட்டப்பணிகள் முடங்கி போயுள்ளது. நிதி முழுமையாக கிடைத்தவுடன் அனைத்து வார்டுகளிலும் பணிகளை தொடங்கி விடுவோம். ரூ.5 லட்சத்துக்குள் செய்து கொள்வதாக இருந்தால் 2 நாட்களில் டெண்டர் வைத்து கொடுக்கப்படும்.

யூனியன் தலைவர்: ரூ.5 லட்சத்துக்குள் வேலை செய்வதாக இருந்தால் தேவை உள்ளவர்கள் உடனடியாக பெற்று கொள்ளலாம்.

கவுன்சிலர் சேவியர் ஆரோக்கிய ஜான்சிராணி: புளியால் பைபாஸ் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போலீஸ் செக்போஸ்ட் அருகே உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். வெட்டிவயல் கிராமத்தில் சாலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அமைக்கப்படுகிறது.

யூனியன் ஆணையாளர்: கலெக்டர் அனுமதி பெற்று உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

என்ஜினீயர் ராமசாமி: வெட்டிவயல் கிராமத்தில் அலங்கார கற்கள் பதித்து சாலை அமைப்பதற்கு இந்த கவுன்சிலுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டது. ஆகவே அந்த பணி தொடர்ச்சியாக நடந்து கொண்டுள்ளது. இனிவரும் காலங்களில் தகவல் அளிக்கப்படும்.

கவுன்சிலர் கணேசன்: உடப்பன்பட்டிக்கு அலங்கார கற்கள் பதித்து சாலை அமைக்கப்படுகிறது. இந்த வேலையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். வார்டில் திட்டப்பணிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்வதோடு, அதற்கான பணிகளையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்