தஞ்சை அருகே புறவழிச்சாலை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது - அதிகாரியிடம் விவசாயிகள் மனு

தஞ்சை அருகே புறவழிச்சாலை அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது என அதிகாரியிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

Update: 2020-09-30 12:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி-கண்டியூர் சாலையில் ஒன்பத்துவேலி, மைக்கேல்பட்டி கிராமங்களில் புறவழிச்சாலை அமைப்பதற்கான ஆயத்த பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கியுள்ளனர். இந்த புறவழிச்சாலைக்காக ஒன்பத்துவேலி, மைக்கேல்பட்டி கிராமங்களில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை நாசம் செய்து கற்கள் ஊன்றப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் தலைமையில் விவசாயிகள் நடுக்காவேரி முருகானந்தம், ஒன்பத்துவேலி மோகன், கிருபாகரன், கலியமூர்த்தி மற்றும் வக்கீல் பைசல் ஆகியோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், நிலத்தடி நீர் அதிகமாக உள்ள விளைநிலங்களின் வழியாக புறவழிச்சாலை அமைக்கப்போவதாக கூறி பயிர்களை நாசம் செய்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கற்களை ஊன்றி உள்ளனர். இந்த விளை நிலங்களில் தலைமுறை, தலைமுறையாக முப்போகம் சாகுபடி செய்து வருகிறோம். கடும் வறட்சியான காலத்திலும் 90 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கும். காவிரி, குடமுருட்டி ஆறுகளின் மூலம் பாசனம் பெற்று சாகுபடி செய்து வருகிறோம். நல்ல மகசூலை பெற்று வருகிறோம். காவிரியில் பிரியும் கோணங்கடுங்கலாறு கரையை விரிவுபடுத்தினாலே போதும் விளை நிலங்களை கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.

கோணங்கடுங்கலாறு கரையை செப்பனிட்டால் வேளாண்மை இடுபொருட்களையும், உற்பத்தி பொருட்களையும் கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எந்த நிலத்தில் வேண்டுமானாலும் சாலை அமைக்க முடியும். ஆனால் நஞ்சை நிலத்தில் மட்டும் தான் சாகுபடி செய்ய முடியும். எனவே விளைநிலங்களில் புறவழிச்சாலை அமைக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின முடிவு சட்டவிரோதமானது. எனவே புறவழிச்சாலை அமைக்க விளைநிலங்களை கையப்படுத்தும் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்று கொண்ட அவர், மாற்று வழியில் புறவழிச்சாலை அமைக்க பாதை இருந்தால் பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்