வேலூர் கோட்டைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு சோதனைக்கு பின்னரே - பக்தர்களுக்கு அனுமதி

வேலூர் கோட்டைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சோதனைக்கு பின்னரே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2020-09-30 05:16 GMT
வேலூர்,

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இமாம்அலி என்பவர் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி பெங்களூருவில் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். அவரது நினைவு நாளையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய வழிபாட்டு தலங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வேலூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் கோட்டை நுழைவு வாயில் முன்பு வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சோதனைக்கு பின்னர் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வந்த வாகனங்களும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பு காணப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘இமாம் அலியின் நினைவு நாளை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று (நேற்று) பிரதோஷ வழிபாடு என்பதால் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அங்கு மசூதியும் உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் நகரில் உள்ள முக்கிய மதவழிபாட்டு தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். வாகனங்களில் போலீசார் அவ்வப்போது ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்’ என்றனர்.

கோவிலுக்கு வந்த வடமாநில பக்தர்கள் சிலர் கோட்டையை சுற்றி பார்க்க முயன்றனர். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்