சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் டிராலிகள் பயன்படுத்த தொடரும் தடை - சுமைகளை தூக்க முடியாமல் பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் உடமைகளை சுமந்து செல்லும் டிராலிகள் பயன்படுத்த தொடரும் தடையால் பயணிகள் அவதியடைகின்றனர்.

Update: 2020-09-30 00:41 GMT
ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் ஊரடங்கால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த மாா்ச் 24-ந் தேதியில் இருந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து உள்நாட்டு விமான சேவைகள் கடந்த மே மாதம் 25-ந் தேதியில் இருந்து குறைந்த அளவில் கடும் கட்டுப்பாடுகளுடன் இயங்க தொடங்கின.

அப்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சுமாா் 30-க்கும் குறைவான விமானங்களில் 3 ஆயிரம் பயணிகளே பயணித்தனா். உள்நாட்டு பயணிகள் பெரிய அளவில் உடமைகள் எடுத்து செல்லக்கூடாது. பயணிகளுக்கு உடமைகளை சுமந்து செல்லும் டிராலிகள் சேவைகள் கிடையாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.

மத்திய-மாநில அரசுகள் கடந்த 1-ந் தேதியில் இருந்து ஊரடங்கில் தளா்வுகள் அறிவித்தன. இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகளும், பயணிகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்து உள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தற்போது நாளொன்றுக்கு 126 விமானங்கள் இயக்கப்பட்டு சுமாா் 13 ஆயிரம் பயணிகள் பயணிக் கின்றனா். ஆனாலும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் டிராலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை எந்தவித தளா்வும் இல்லாமல் நீடிக்கிறது.

இதனால் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு பகுதிகளில் பயணிகள் டிராலிகள் இல்லாமல் பயணிகள் கடுமையான அவதிக்கு உள்ளாகின்றனா். டிராலி இல்லாததால் சிலா் விமானநிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனா். ஆனால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வழக்கம்போல் டிராலி சேவைகள் பயணிகளின் பயன்பாட்டில் உள்ளன.

இதுபற்றி சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒரே டிராலியை பல பயணிகள் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை கூறியதால் உள்நாட்டு முனையத்தில் டிராலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

ஆனால் பயணிகள் தரப்பில் கூறும்போது, விமான டிக்கெட் கட்டணத்தில் டிராலி பயன்பாட்டிற்கும் சோ்த்து தான் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டிராலியை தர மறுப்பது விமான சட்டவிதிகளுக்கு புறம்பானது என்று தெரிவித்தனா்.

மேலும் செய்திகள்