சான்றிதழ் ஒப்படைக்கப்பட்டது எச்.ஏ.எல். நிறுவனத்தில் 300-வது நவீன துருவ் ஹெலிகாப்டர் உற்பத்தி

எச்.ஏ.எல். நிறுவனத்தில் 300-வது நவீன துருவ் ஹெலிகாப்டர் உற்பத்தி செய்யப்பட்டது.

Update: 2020-09-29 22:47 GMT
பெங்களூரு,

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்.ஏ.எல். நிறுவனம், ராணுவத்திற்கு தேவையான ஹெலிகாப்டர், சிறியரக போர் விமானங்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த நிறுவனத்தில் ஏ.எல்.எச். துருவ் என்று சொல்லக்கூடிய நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த வகையை சேர்ந்த 300-வது நவீன துருவ் ஹெலிகாப்டரை எச்.ஏ.எல். நிறுவனம் வெற்றிகரமாக உற்பத்தி செய்து வழங்கியுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எச்.ஏ.எல். நிறுவனத்தில் 300-வது ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் உற்பத்தி செய்யப்பட்டு, தலைமை செயல் அதிகாரி ஜி.வி.எஸ்.பாஸ்கரிடம் சான்றிதழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழை விமான தர உறுதி நிறுவனத்தின் தென்மண்டல கூடுதல் இயக்குனர் ஜெனரல் ஒய்.கே.சர்மா வழங்கினார். இந்த துருவ் ஹெலிகாப்டர் முதன் முதலில் கடந்த 1992-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி உற்பத்தி தொடங்கப்பட்டது. எந்த சிக்கலும் இல்லாமல் அந்த ஹெலிகாப்டர் உலக தரத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஹெலிகாப்டரின் மதிப்பீடு மார்க்-1 முதல் மார்க்-4 வரை தனித்துவத்துடன் திகழ்கிறது.

38 ஹெலிகாப்டர்கள்

ஜி.வி.எஸ்.பாஸ்கர் பேசும்போது, இந்த துருவ் ஹெலிகாப்டர் இதுவரை 2 லட்சத்து 80 ஆயிரம் மணி நேரம் வெற்றிகரமாக ஓடி பன்முக தன்மை கொண்டது என்பதை நிரூபித்துள்ளது. இது எந்த திட்டத்திலும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் சிறப்பாக செயல்படக்கூடியது என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்திய ராணுவத்திற்கு 41 ஹெலிகாப்டர்கள், இந்திய கடற்படைக்கு 16 ஹெலிகாப்டர்கள், கடலோர படைக்கு 16 ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில் 38 ஹெலிகாப்டர்கள் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள ஹெலிகாப்டர்கள் வருகிற 2022-ம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்யப்படும்.

இவ்வாறு எச்.ஏ.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்