6 மாதங்களுக்கு பிறகு நடவடிக்கை: உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயார் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்

மராட்டியத்தில் உணவகங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.

Update: 2020-09-29 00:33 GMT
மும்பை,

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டதில் முக்கியமானது உணவகங்கள் (ரெஸ்ட்ரான்ட்) ஆகும். கடந்த மார்ச் இறுதி முதல் மாநிலம் முழுவதும் உணவகங்கள் வாடிக்கையாளர்களை அனுமதிக்காமல் மூடியே கிடக்கின்றன. பார்சல், ஆன்லைன் மூலம் மட்டுமே உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஓட்டல், உணவக உரிமையாளர்கள் போதிய வருமானம் இன்றி தவித்து வந்தனர். எனவே அவர்கள் வாடிக்கையாளர்களை உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலமாக மும்பை, புனே, அவுரங்காபாத், நாக்பூர் பகுதி உணவக சங்க பிரதிநிதிகளுடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

உணவகங்களை மீண்டும் திறப்பது தொடர்பாக மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி உள்ளது. அவை சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் இறுதி செய்யப்பட்டபின் உணவகங்களை திறப்பது தொடர்பான முடிவு வெளியிடப்படும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளால் உணவகங்களுக்கு பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது.

உணவக சமையல்காரர்கள் மற்ற ஊழியர்களின் உடல்நலனை பார்த்து கொள்வது மிகவும் முக்கியமாகும். அவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, கைகளை அடிக்கடி சுத்தம் செய்து பாதுகாப்பையும், உணவக தூய்மையையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டியத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 30-ந் தேதியுடன் முடிகிறது. முதல்-மந்திரி வழிகாட்டு நெறிமுறை தயாராக இருப்பதாக கூறியதால், அடுத்த மாத முதல் வாரத்தில் உணவகங்கள், கேண்டின்கள், உணவு விடுதிகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து சுமார் 6 மாதத்திற்கு பிறகு மராட்டியத்தில் உணவகங்கள் திறக்க தயாராகி வருகின்றனர்.

மேலும் செய்திகள்