வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு விமானம், ரெயில் நிலையங்களை முற்றுகையிட முயற்சி கன்னட அமைப்பினர் கைது

வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் விமானம், ரெயில் நிலையங்களில் முற்றுகையிட முயன்ற கன்னட அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-09-28 23:49 GMT
பெங்களூரு,

மத்திய அரசு வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை அமல்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடகத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த முழு அடைப்பு போராட்டத்தில் விவசாய சங்கத்தினர், கன்னட அமைப்பினர் உள்பட 32 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை ரக்‌ஷண வேதிகே அமைப்பினர் திடீரென முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கன்னட அமைப்பினரை தடுத்து நிறுத்தினர். அப்போது வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் கன்னட அமைப்பினர் கோஷம் எழுப்பினர். இதனால் பெங்களூரு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விமான நிலையத்தை முற்றுகையிட வந்த கன்னட அமைப்பினரை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

இதுபோல பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக கன்னட அமைப்பினர் பேரணியாக சென்றனர். அவர்களை ரெயில் நிலைய நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

அப்போது சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் பஸ்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்