தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம் ஈரோட்டில் நடந்தது.

Update: 2020-09-28 22:30 GMT
ஈரோடு,

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களையும் திரும்ப பெறக்கோரியும், அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க. கூட்டணி கட்சிகளான மதசார்பற்ற கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மணல்மேடு பகுதியில் உள்ள தி.மு.க. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. சார்பில் அ.கணேசமூர்த்தி எம்.பி. கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறு, மோடி அரசே பா.ஜ.க. அரசே, ஓய மாட்டோம், ஓய மாட்டோம், விவசாயிகளின் நலன் காக்கும் வரை ஓய மாட்டோம். திரும்ப பெறு, திரும்ப பெறு வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப்பெறு.

வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது விவசாயிகளாக இருக்கட்டும். பதுக்கலுக்கு வழிவகுக்கும் சட்டங்களை திரும்ப பெறு. மண்ணை காக்க ஆர்ப்பாட்டம், விவசாயிகளை காக்க ஆர்ப்பாட்டம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. பச்சை நிற துண்டு, பச்சை நிற முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஆ.செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிசாமி, இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ், அவைத்தலைவர் குமார் முருகேஷ், முன்னாள் எம்.பி. கந்தசாமி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, துணைத்தலைவர் கே.என்.பாட்ஷா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய பொறுப்பாளர் த.ஸ்டாலின் குணசேகரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஏ.சித்திக், செயலாளர் பி.சலீம், மாநகர தலைவர் ஜாஹீர் உசேன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் முகம்மது லரீப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர்கள் துரைராஜ், மாரிமுத்து, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி, பொருளாளர் கே.கே.சி.பாலு.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கர், திராவிடர் கழக மண்டல அமைப்பாளர் த.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொறுப்பாளர் நூர்சேட் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மாடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. ஏர் உழவு செய்யும் விவசாயி ஒருவர் காட்சிக்காக கலப்பையுடன் நின்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். இதுபோல், நாற்று நடும் தொழிலாளர்கள் நாற்று நடவு செய்வது போன்று பங்கேற்றனர்.

இதேபோல் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் ஈரோடு சூளை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. துணைச்செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் தி.க. மாவட்ட செயலாளர் மணிமாறன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொறுப்பாளர் தமிழ்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ஈரோடு திண்டல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெ.சுரேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் முகமது அர்சத், கலை இலக்கிய பிரிவு மாவட்ட நிர்வாகி ஆனந்த் என்கிற பிரேமானந்த், பொறுப்பாளர்கள் பழனிசாமி, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்