பாரம்பரிய கலையை மீட்டெடுக் கராமநாதபுரத்தில் மல்லர் கம்பம் கழகம் தொடக்கம்

தமிழர்களின் பாரம்பரிய உடல்வலிமை பெறும் கலையான மல்லர் கம்பம் கலையை மீட்டெடுக்கும் வகையில் ராமநாதபுரத்தில் மல்லர் கம்பம் கழகம் தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2020-09-28 04:28 GMT
ராமநாதபுரம்,

பாரம்பரிய சிலம்பத்தில் கம்பை மனிதர்கள் சுற்றுவார்கள், கம்பத்தில் மனிதர்கள் உடலை வளைத்து சுழல்வதே மல்லர் கம்பம் கலை ஆகும். பண்டைய காலத்தில் தமிழக போர் வீரர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் உடல்வலிமைக்காக இந்த மல்லர் கம்பம் விளையாட்டினை விளையாடி தேக ஆரோக்கியத்தை வலுவடைய செய்துள்ளனர். சோழர்களும், பல்லவர்களும் மல்லர் விளையாட்டை போற்றி பாதுகாத்து வந்ததால் அவர்களின் அரசவையில் தலைசிறந்த மல்லர்கள் இருந்து வந்துள்ளனர்.

மல்லர் விளையாட்டிலும் மல்யுத்தத்திலும் தலை சிறந்த முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் இதனாலேயே மாமல்லன் என அழைக்கப்பட்டதாக வரலாறுகளில் கூறப்படுகிறது. களரி, மல்யுத்தம், பிடிவரிசை, வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலைகளை போல மல்லர் கம்பமும் உடல்வலு விளையாட்டாகும். மல்லர் கம்பம் மராட்டியம், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்றளவும் பிரபலமாக உள்ளது. பல மாநிலங்கள் மல்லர் கம்பம் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மராட்டியத்தில் எந்த விழாவை தொடங்கினாலும் இறைவணக்கத்துக்கு பின்னர் 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அழிந்துவரும் இந்த மல்லர் கம்பம் விளையாட்டினை மீட்டெடுத்து புத்துயிர் அளிக்க தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பயிற்சி

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தேசிய பயிற்சியாளர் தங்கம் விருதுபெற்ற செல்வமொழியன் பயிற்சி அளித்து இதுவரை 60 ஆண்கள் மல்லர் கம்பம் பயிற்சி பெற்றுள்ளனர். இதேபோல், மரத்தில் கயிறு கட்டி மல்லர் கம்பம் விளையாட்டில் 20 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த கலையை மேலும் பலருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் ராமநாதபுரத்தில் மல்லர் கம்பம் கழகம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் டி.டி.விநாயகர் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள மல்லர் கம்பம் கழகத்தின் தலைவராக அரு.சுப்பிரமணியன், செயலாளராக லோகசுப்பிரமணியன், பொருளாளராக சரவண சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடக்க விழாவில் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வாரத்தில் 2 நாட்கள் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். ஒரு மாதத்தில் இந்த பயிற்சியை பெற்றுக்கொள்ள முடியும். இதன்மூலம் உடலும் உள்ளமும் பலம்பெறும். எந்தநோயையும் எதிர்கொள்ளும் உடல்வலிமை, எதிர்ப்பு சக்தி இந்த மல்லர்கம்பம் பயிற்சிக்கு உண்டு. தமிழர்களின் பாரம்பரிய கலையான இந்த மல்லர் கம்பம் கலையை நாம் மறந்துவிட்ட நிலையில் அதனை முறையாக கற்று சீனா உலகளவில் முன்னிலை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்